எல்ல வெல்லவாய பிரதான வீதி மீண்டும் முடக்கம்! வெளியான அறிவிப்பு
இலங்கையில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதியை மீண்டும் முடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றிரவு (17-05-2024) 08:00 மணி முதல் நாளை (18-05-2024) காலை 06:00 மணி வரை மூடுவதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நேற்று (16) காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை குறித்த வீதியை மூடுவதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எல்ல வெல்லவாய வீதியில் உள்ள ராவணன் நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் இருந்து பெரிய நீரோடை ஒன்று எல்ல வெல்லவாய வீதியில் பாய்ந்து செல்வது கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது.
மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக பல இடங்களில் வீதி மூடப்பட்டிருந்ததுடன், வெல்லவாய வீதியின் ஒரே மாற்றுப் பாதையாக இருந்த அம்பதண்டேகம ஊடாக வெல்லவாய வீதியிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது.
இதன்படி குறித்த வீதியும் மூடப்பட்டதுடன், பண்டாரவளை மாகாண வீதி அபிவிருத்தி பிரிவினால் வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது.