சிகிச்சைக்குச் சென்ற 12 வயது சிறுமி உயிரிழப்பு ; தீர்வு கோரும் பிரதேச மக்கள்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் இறுதிக்கிரியைகள் இன்று (24) இடம்பெற்ற நிலையில் அவரது நண்பர்கள் சிறுமியின் உடலை சுமந்து சென்று சிறுமிக்காக நீதிக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.