மின்சார வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு ; புதிய கட்டண விதிகள் விவரம்
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களுக்காக (EVCS) புதிய மின்சாரக் கட்டண வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய கட்டண திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண அமைப்பின்படி, மின்னேற்ற நிலையங்களுக்கு நேர அடிப்படையிலான (Time-of-Use) கட்டணங்கள் விதிக்கப்படும்.
இதன்படி, DC அதிவேக மின்னேற்றம் (DC Fast Charging) மற்றும் AC லெவல் 2 மின்னேற்றம் (AC Level 2 Charging) ஆகியவற்றிற்கு தனித்தனி கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டண விபரங்கள் (ஒரு அலகுக்கு - kWh):

1. DC அதிவேக மின்னேற்றம் (DC Fast Charging): உச்ச நேரம் (Peak): ரூ. 111 பகல் நேரம் (Day): ரூ. 87 மற்றைய நேரம் (Off-peak): ரூ. 53 2. AC லெவல் 2 மின்னேற்றம் (AC Level 2 Charging): உச்ச நேரம் (Peak): ரூ. 90 பகல் நேரம் (Day): ரூ. 70 மற்றைய நேரம் (Off-peak): ரூ. 40 இதேவேளை, மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களுக்காக இரண்டு புதிய பிரிவுகளையும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
EVCS-1: 400/230V வழங்கல் மற்றும் 42 kVA வரையிலான ஒப்பந்தத் தேவையைக் கொண்ட மின்னேற்ற நிலையங்களுக்கு இது பொருந்தும்.
EVCS-2: 400/230V அல்லது அதற்கு மேற்பட்ட வழங்கல் மற்றும் 42 kVA இற்கும் அதிகமான ஒப்பந்தத் தேவையைக் கொண்ட மின்னேற்ற நிலையங்களுக்கு இது பொருந்தும்.
முக்கிய நிபந்தனைகள்,
மின்னேற்ற நிலையங்கள் இதற்கென பிரத்யேக மின்சார இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
அத்துடன், இந்தப் புதிய கட்டணச் சலுகையைப் பெறுவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமிருந்து விலக்குச் சான்றிதழ் அல்லது ஆட்சேபனை இல்லாக் கடிதத்தைப் (No-Objection Letter) பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத நுகர்வோருக்குப் 'பொது நோக்கத்திற்கான' (General Purpose) மின்சாரக் கட்டணமே வசூலிக்கப்படும்.
தேசிய மின் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, உச்சமற்ற நேரங்களில் (Off-peak hours) வாகனங்களை மின்னேற்றம் செய்வதை ஊக்குவிப்பதும், மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிப்பதும் இந்த புதிய கட்டண அறிமுகத்தின் நோக்கமாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.