தேர்தலுக்கு தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியினை வழங்குமாறு, அரசாங்க திறைசேரி செயலாளரிடம் அடுத்த வாரம் மீண்டும் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது, குறிப்பிட்ட மட்டத்தில் இருப்பதாக அரசாங்கமே அறிக்கைகளை வெளியிடுவதால் இந்த கோரிக்கை விடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியினை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பலமுறை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்த போதும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிதியினை வழங்கமுடியாதென திறைசேரி செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தாகவும் நிமல் ஜி புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே உள்ளாட்சி மன்ற தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கேள்வி எழுப்பபட்டிருந்தது.
இதற்கு பதில் வழங்கிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு விசேட சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி குறிப்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வெறும் பிரேரணையால் வேட்புமனுக்களை இரத்துச் செய்யமுடியாது என்றும் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.
அத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான தபால் மூல வாக்குகள் அச்சிடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தற்போது அரசு அச்சகத்தின் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.