தான் பயணம் செய்த பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு
களுத்துறை பிரதேசத்தில் பதுரலிய - திக்ஹேன வீதியில் திக்கொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பதுரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வயோதிபரொருவரே உயிரிழந்துள்ளார்.
வீதியை கடக்க முற்பட்ட போது மோதிய பஸ்
பதுரலியவிலிருந்து திக்ஹேன நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது அதே பஸ்ஸில் மோதி காயமடைந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.