இலங்கையை தாக்கும் எல் நினோ ; யாழ். பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள 'எல் நினோ' (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் தற்போது இலங்கைக்கு அருகில் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளதாகவும், இதன் தாக்கம் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தீவிரமடையக்கூடும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மிலேனியம் ஹோட்டலில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், எல் நினோவால் இலங்கையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மே முதல் செப்டம்பர் வரை வறட்சியான காலநிலையும் அதிக வெப்பமும் நிலவுகின்றன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள், முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான் மற்றும் வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே நீர் நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 60 நாட்களில் இந்தப் பகுதிகளில் வெறும் 12 மில்லிமீற்றர் மழை மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் 288 மில்லிமீற்றருக்கும் அதிகமான நீர் ஆவியாகியுள்ளதாகவும், இதனால் நீர் வளங்கள் வேகமாக குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எல் நினோவின் தாக்கம் அதிகரிப்பதால் வெப்பநிலை மேலும் உயர்ந்து, ஆவியாக்கமும் பல மடங்கு அதிகரிக்கும். மழையற்ற வறண்ட காலநிலை நீடிப்பதால் தற்போது உள்ள நீர்நிலைகளே மக்களின் பிரதான நீர் ஆதாரங்களாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தற்போதுள்ள நீர் வளங்களை வீணாக்காமல் பாதுகாப்பதுடன், சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகளை அரசாங்கமும் மக்களும் இணைந்து உடனடியாக உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மத்திய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ உருவாகியுள்ளது அனைத்து காலநிலை மாதிரிகளாலும் 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜூலை 10 ஆம் திகதி நிலவரப்படி எல் நினோ 3.4 பிராந்தியத்தின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1.4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வெப்பநிலை ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் 2 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என்றும், அதன் தாக்கம் இந்தியப் பெருங்கடல் வழியாக இலங்கைக்கு அருகில் விரிவடையும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலையும் தற்போதைய நிலையை விட சுமார் 1.8 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

எல் நினோவுடன் தொடர்புடைய வெப்ப அலை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஸ்பெயினில் எதிர்பாராத காட்டுத்தீ சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஜூலை முதல் செப்டம்பர் வரை கடுமையான வறட்சி நிலவக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடும் மழை பெய்யும் சாத்தியமும் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
அரசாங்க திணைக்களங்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டு, நீர் பாதுகாப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுத்தால் மட்டுமே இந்த எல் நினோ காலநிலை சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.