புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு தவறான நண்பர்களின் சகவாசத்தால் காத்திருக்கும் சிக்கல்
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர், தவறான நண்பர்களின் சகவாசம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீண்டும் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று போதைப்பொருள் மறுவாழ்வு பணியகத்தின் தலைமை பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ்.அமித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு
போதைப்பொருள் மறுவாழ்வுப் பணியகம் மற்றும் அபாயகரமான மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய அண்மை ஆய்வின்படி, புனர்வாழ்வு பெற்றுச் சென்றவர்கள் மீண்டும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்தபோது பல முக்கிய விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதன்படி, 47 சதவீத புனர்வாழ்வு முடித்தவர்கள் தங்களின் பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு கொண்டதாலேயே மீண்டும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக பிரதான காரணமாக உள்ளது.
மேலும், அவர்கள் வாழும் சமூகச் சூழலின் தாக்கம், காரணமாக 24.5 சதவீதமானோர், குடும்பத்தினரின் முறையான அரவணைப்பும் கவனமும் கிடைக்காததால் 23 சதவீத பேரும், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள சூழல் காரணமாக 22 சதவீத பேரும், காதல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இதர காரணங்களால் 4 சதவீதமானவர்கள் மீண்டும் போதைப்பாதையைத் தேர்ந்தெடுத்துக்கின்றனர்.
இந்த ஆய்வின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பாக, பெரும்பாலானவர்கள் தங்களின் 11 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பள்ளிப் பருவத்திலேயே முதன்முதலில் புகையிலை, சிகரெட் மற்றும் பீடி போன்றவற்றுக்கு அடிமையாகி, பின்னரே கடுமையான போதைப்பொருட்களுக்கு மாறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
புனர்வாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 76 சதவீத பேர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை அல்லது அதற்கும் குறைவாகப் படித்தவர்களாவர். மாறாக, உயர் தரம் வரை கல்வி கற்றவர்களில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக, அதாவது 13 சதவீத ஆக மட்டுமே உள்ளது.
இதன் காரணமாக, பிள்ளைகளை சாதாரண தரத்துடன் நிறுத்திவிடாமல், அவர்களை உயர் கல்வி நோக்கி ஊக்குவித்து வழிநடத்த வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமூகத்துக்கும் உண்டு.
இளம் தலைமுறையினரை இந்த போதையிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 இலட்சம் பேரைச் சென்றடையும் வகையில் 1,050 விழிப்புணர்வுத் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு 1,278 விழிப்புணர்வு திட்டங்களை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 660 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் சுமார் 62,000 பேர் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.