2027 வரை எல் நினோ காலநிலை; உலக மக்களுக்கு எச்சரிக்கை!
உலகின் பல நாடுகளைப் பாதித்து வரும் எல் நினோ காலநிலை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
எல் நினோ தாக்கத்தால் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் சுமார் நூறு சதவீதத்திற்கு அண்மித்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

மிகத் துல்லியமான முன்னறிவிப்பு
இவ்வாறான மிகத் துல்லியமான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், உலக வானிலை அமைப்பின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில், அத்தகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதும் இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல பசுபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக உருவாகும் எல் நினோ, எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமி முன்னெப்போதும் இல்லாத வகையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலைக்குள் நுழைந்து வருவதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆபத்தான காலநிலை நிலைமை உருவாகி வருவதாகவும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
அதேவேளை இலங்கையிலும் எல் நினோ காலநிலை பின்னணியில், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக சிறிய குளங்கள் முதல் பாரிய நீர்த்தேக்கங்கள் வரையிலான பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
நீர் பற்றாக்குறையால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.