மட்டக்களப்பு கடலில் படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி ஒருவர் மாயம்
மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் , ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான்குளம் கடல் பகுதியில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் தோணி ஒன்றில் மூன்று மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர். இதன்போது, எதிர்பாராதவிதமாக வீசிய பாரிய அலை ஒன்றில் சிக்கி அத்தோணி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்கத் தலைவரான 'நாகேந்திரன்' என அழைக்கப்படும் துரைராஜா முத்தையா நீரில் மூழ்கி மாயமாகியுள்ள நிலையில், விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணை
அதேவேளை, தோணியில் பயணித்த 45 வயதுடைய செல்வகுமார் என்ற மீனவர் அலையை எதிர்த்து நீந்திப் போராடிப் பாதுகாப்பாகக் கரையை வந்தடைந்துள்ளார். காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கியவர்களில் அமரசிங்கம் பரமலிங்கம் என்பவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
எனினும், காணாமல்போயுள்ள மீனவர் சங்கத் தலைவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர், சக மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.