உலக இசைப்பிரியர்களை கட்டிப்போட்ட ஈழத் தமிழ் யுவதி; அவுஸ்திரேலியாவின் மிக உயரிய இசை விருது
ஆஸ்திரேலியாவின் உயரிய இசை மேடைகளில் முத்திரை பதித்துள்ள ஈழத் தமிழ் பெண் எக்கா வாண்டலின் இசை விருது வெற்றி, உலகளாவிய தமிழ் சமூகத்திற்குப் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மிக உயரிய இசை விருது விழாவான 40-வது வருடாந்திர 'ARIA' (Australian Recording Industry Association) இசை விருதுகளில், ஈழத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இசைக்கலைஞர் 'எக்கா வாண்டல்' (Ecca Vandal) 4 முக்கிய விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு
Looking for People to Unfollow என்ற தனது இரண்டாவது இசைத் தொகுப்பிற்காக 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இவர், சிறந்த திருப்புமுனைக் கலைஞர் உள்ளிட்ட 4 விருதுகளைத் தட்டிச் சென்றார்.
இதற்கு முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் சிறந்த ஆஸ்திரேலிய இசைத் தொகுப்பிற்கான 50,000 டாலர் பரிசுத் தொகை கொண்ட மதிப்புமிக்க 'ஆஸ்திரேலிய இசைப் பரிசையும் இவர் வென்றிருந்தார்.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரினால் அகதிகளாகத் தென்னாப்பிரிக்காவிற்கு இடம்பெயர்ந்த ஈழத் தமிழ் பெற்றோருக்கு மகளாகப் பிறந்த எக்கா, அங்கு நிலவிய இனப் பிரச்சினைகள் காரணமாகப் பின்னர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்தார்.

மெல்போர்னில் உள்ள தமிழ் சமூகத்தினருடன் இணைந்து வளர்ந்த இவரது இல்லத்தில், தமிழ் மற்றும் இலங்கை பைலா இசையோடு தென்னாப்பிரிக்க, கோஸ்பல் மற்றும் ஆர்&பி (R&B) இசைகளும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன.
விக்டோரியன் கலைக் கல்லூரியில் ஜாஸ் இசைப் பயிற்சி பெற்ற எக்கா வாண்டல், பின்னர் தனக்கென ஒரு தனித்துவமான Punk மற்றும் ராப் இசைப் பாணியை உருவாக்கிக் கொண்டார்.
பல்வேறு இசை வடிவங்களை ஒன்றிணைக்கும் இவரது ஆற்றல்மிக்க இசைப் படைப்புகள் இன்று சர்வதேச இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றன.