ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் ; தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை ; றிஷாட்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தம்மை சஹ்ரான் ஹாஷிமுடன் மீண்டும் தொடர்புபடுத்தும் வகையில் வெளியாகும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தாம் ஏற்கனவே ஏழு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சில தகவல்கள் ஊடகங்களில் தம்மை மீண்டும் தாக்குதலுடன் இணைக்கும் வகையில் செய்தியாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

வர்த்தகர் அலாவுதீனுடனான தொடர்பின் அடிப்படையில் சஹ்ரானுடன் தமக்கு தொடர்பு ஏற்பட்டதாக Additional Solicitor General கூறியதாக வெளியான செய்தியையும் அவர் மறுத்தார்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சுயாதீனமான, அரசியல் தலையீடற்ற விசாரணை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் குற்றமற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழ் இளைஞர் எஸ். அனோஜன் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்து, அவருக்கு உதவுவதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அனோஜனுக்காக சவூதி அரசாங்கத்திடம் கருணை கோரிக்கை முன்வைப்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஜனாதிபதி மற்றும் சவூதி தூதரகம் ஊடாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.