வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி
மட்டக்களப்பு வாவியிலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியிலேருந்து நேற்று(31) மாலை அவ் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் வாவியில் சடலம் ஒன்று கரையொதுங்கியதைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யுவதி தொடர்பில் தெரிய வந்தவை
மட்டக்களப்பு பண்டிங்ஸ் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து துவிச்சக்கரவண்டி ஒன்றில் நேற்று(31) நண்பகல் வேளையில் வெளியே சென்றிருந்த நிலையில் குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைவாக மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.