கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் போதைப்பொருள் இருந்துள்ளமை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ஆம் திகதி கனடாவில் இருந்து கப்பலில் வந்த கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடக செயலாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
வவுனியா மற்றும் களுத்துறை முகவரிகளுக்கு
நாட்டுக்கு அனுப்பட்ட கஞ்சா வவுனியா மற்றும் களுத்துறை முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள ஒருவருக்கு வந்த பார்சல் ஒன்றில் 08 டின் கஞ்சா இருந்ததாகவும் பொதியின் எடை 5,324 கிராம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேசமயம் வவுனியாவில் உள்ளவருக்கு வந்த பார்சலின் எடை 1755 கிராம் என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கை தெரிவிக்கிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு தனித்தனியாக 31,994,000 மற்றும் 10,530,000 ரூபாவாகும்.
மீட்கப்பட்ட போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணை மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.