யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்பியால் குழப்பம்; அரச அதிகாரிகள் ஆத்திரம்!
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விதண்டாவாதமாக கேள்வி கேட்டதால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அருச்சுனா எம்பியை வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்டதை அடுத்து நிலைமை சுமூகமானதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13) காலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.
கடவுளாக இருந்தாலும் வைத்தியசாலைக்குள் அனுமதிக்க மாட்டோம்
அதேவேளை கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி ,
அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள்.
இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும். அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள் .
யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால் கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதிக்க மாட்டோம் எனவும் காட்டமாக கூறினார்.
கடந்த நாட்களில் அருச்சுனா எம்பி யாழ் போதனா மருத்துவமனைக்குள் நுழைந்து அடாவடியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.