பொலிஸ் கான்ஸ்டபிள் வீட்டில் போதைப்பொருள் களஞ்சியசாலை
பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியில் , தனது வீட்டில் போதைப்பொருள் களஞ்சியசாலை நடத்தி வந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் , கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் கொஹூவல காவல்துறையின் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கான்ஸ்டபிளின் மனைவி மற்றும் போதைப்பொருட்களை வழங்கியவர்
கைது செய்யப்பட்டவர்களில் கான்ஸ்டபிளின் மனைவி மற்றும் போதைப்பொருட்களை வழங்கிய நபரும் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 150 மி.கி. போதைப்பொருள் கொண்ட 21 பெட்டிகள் மற்றும் 300 மி.கி. போதைப்பொருள் கொண்ட 1 பெட்டி என மொத்தம் 1,330,420 போதைப் பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கொஹூவல காவல்துறையின் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள், பொரலஸ்கமுவ, பெல்லன்வில ஜெயா மாவத்தை பகுதியில் தற்காலிகமாக வசித்து வருவதாக கூறப்படுகின்றது.
அதோடு அவர் தனது வீட்டில் போதைப்பொருள் களஞ்சியசாலை நடத்தி தீவு முழுவதும் விநியோகித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.