போதைக்கு அடிமையான மகனால் தந்தைக்கு நேர்ந்த கதி
அம்பலாந்தோட்டை, ருஹுனு ரிதியகம பிரதேசத்தில் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (04) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,
தாயை காப்பாற்ற சென்றவர் மீது கத்திக்குத்து
மகன் போதைப்பொருள் வாங்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வீட்டில் இருந்த தொலைகாட்சி பெட்டியை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இதன்போது, வீட்டில் இருந்த தாய்மகனை கடுமையாகத் திட்டியதனால் கோபமடைந்த மகன் தனது தாயை கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதனை அவதானித்த தந்தை, தாயை காப்பாற்ற முயன்ற போது மகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தையும் தனது மகனை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த இருவரும் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.