மீண்டும் சூடு பிடிக்கும் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம்; ட்ரம்பின் இரகசிய ஆவணங்கள் வெளியீடு
அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான FBI ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்கை நியூஸ் (Sky News) என்.பி.சி (NBC) நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்கள், இந்த ஆவணங்கள் விடுபட்டிருப்பதாக செய்தி வெளியிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சில விடுபட்ட கோப்புகள்
தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட சில விடுபட்ட கோப்புகள், தரவுப்பட்டியலில் (Spreadsheet) "நகல்" (Duplicative) எனத் தவறாகக் பெயரிடப்பட்டிருந்ததால் அவை பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கவில்லை என்றும், தற்போது அந்தத் தவறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதித்துறை தெரிவித்துள்ளது.
ஜெப்ரி எப்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய ஒரு பெண்ணிடம் FBI நடத்திய மூன்று தனித்தனி நேர்காணல்களின் சுருக்கங்கள் மற்றும் குறிப்புகள் இதில் அடங்கும்.
இருப்பினும் எந்தவொரு தவறான செயலிலும் தான் ஈடுபடவில்லை என ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருவதுடன் , எப்ஸ்டீன் கோப்புகள் டிரம்பை நிரபராதி என நிரூபித்துள்ளதாக அவரும் வெள்ளை மாளிகையும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.