சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ; வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
16 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஒரே நாளில் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல் வழக்கில், 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் தனது வீட்டில் வைத்து 14 வயது சிறுமியின் நண்பியை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, 2020ஆம் ஆண்டு நந்திமித்த கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் மற்றுமொரு நபர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
குறித்த மூன்று குற்றச்சாட்டுகளும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 15 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாவது வழக்கில், கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் 2022ஆம் ஆண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது குற்றங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.