கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது இளைஞர் கும்பல் தாக்குதல்
கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ஆடம்பரப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கிய இளைஞர் கும்பலை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகக் களுத்துறை வடக்கு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றையதினம் 27-ஆம் திகதி மாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மொறட்டுவையில் வைத்து பேருந்தில் ஏற முயன்ற பயணி ஒருவரை நடத்துநர் பேருந்தில் ஏற்ற மறுத்துள்ளார்.
அதையடுத்து, அப்பயணியை ஏற்றாமல் பேருந்து களுத்துறை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது.
பயணம் நிறைவடைந்து களுத்துறையில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், ஓட்டுநர் பேருந்தை நிறுத்துவதற்காகக் கொண்டு சென்றபோது, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ் சந்திக்கு அருகில் வைத்து வாகனம் வழிமறிக்கப்பட்டுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரடங்கிய இளைஞர் குழு, வீதியை மறித்து பேருந்திற்குள் புகுந்து ஓட்டுநரையும் நடத்துநரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இத்தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் பேருந்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளன.
இத்தாக்குதலில் காயமடைந்த நடத்துநர் சிகிச்சைக்காகக் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.