வடக்கில் இருந்து களுத்துறைக்கு மாற்றப்பட்ட வைத்தியர் நந்தகுமாரன்
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் கனகராஜா நந்தகுமாரன், இடமாற்றம் பெற்று, களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக இன்று (28) கடமையேற்றுக்கொண்டார்.
மருத்துவர் கனகராஜா நந்தகுமாரன், வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு சுகாதார நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றிய அனுபவம் மிகுந்தவர்.
இவர் முன்னதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
மருத்துவர் கனகராஜா நந்தகுமாரன், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சுகாதார நிர்வாகத்துறையில் கடமையாற்றியதோடு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிரேஷ்ட மருத்துவ நிர்வாகியாக சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.