சாமானிய மக்கள் மீது பாயும் சட்டங்கள் , விதிகள் காவல்துறைக்கு கிடையாதா? பொதுமகன் ஆதங்கம்
பிபில காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் விதிகளை மீறி கலன்களில் எரிபொருளை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில் சாமானிய மக்கள் மீது பாயும் சட்டங்கள் , விதிகள் காவல்துறைக்கு கிடையாதா? என பொதுமகன் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் விதிகளை மீறி கலன்களில் எரிபொருள் பெற்றுக்கொள்வதனை , எரிபொருள் வரிசையில் நின்ற நபர் ஒருவர் சம்பவத்தை ஒளிப்பதிவு செய்ததுடன், நாட்டின் சாமானிய மக்களுக்கு தாக்கம் செலுத்தும் சட்டங்கள் மற்றும் விதிகள் காவல்துறைக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதா என காவல்துறை பொறுப்பதிகாரியிடம் வினவியுள்ளார்.
அதற்கு காவல்துறை நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியை இயக்குவதற்கு குறித்த டீசல் கொண்டுசெல்லப்படுவதாக காவல்துறை பொறுப்பதிகாரி பதிலளித்துள்ளார்.
அதேவேளை நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் விநியோகிப்பதனை இடைநிறுத்துமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) நேற்று உத்தரவு பிறப்பித்து.
எனினும், இந்த உத்தரவுகளை மீறி நாட்டின் பல பகுதிகளில் கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு இன்னமும் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்படுகின்றமை அவதானிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, கலன்களுக்கான பெற்றோல், டீசல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களைஅண்டிய பகுதிகளில் அதிகளவான உந்துருளிகள் காத்திருக்கின்றன.
இதுவரை காலம் சிறு போத்தல்களில் அல்லது கலன்கள் எரிபொருளை பெற்றுச்சென்று உந்துருளி ஓட்டிகள் தமது வாகனங்களுக்கு நிரப்பியிருந்தனர்.
இந்நிலையில், மேற்படி தடையை அடுத்து , உந்துருளிகளை எரிபொருள் நிலையங்களுக்கு செலுத்திவந்தமையினால் உந்துருளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.