கோட்டாவிற்கு பதிலாக மோடியை மாட்டுங்கள்!
அரச நிறுவனங்களில் கோட்டாவின் புகைப்படத்துக்குப் பதிலாக மோடியின் படத்தை மாட்டுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அவசியமான உரத்தை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாகவும் அது நாட்டை வந்தடைந்தவுடன் 20 நாட்களுக்குள் அதனை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சுக்கள் உள்ளடங்கலாக அனைத்து அரச நிறுவனங்களிலும் மாட்டப்பட்டிருக்கும் ஜனாதிபதியின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதற்குப்பதிலாக இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டுமாறு யோசனை முன்வைக்கினறேன் எனவும் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இப்போது இந்தியாவிடம் தஞ்சமடைவதைத் தவிர வேறெந்த வழிகளும் இல்லாது போயுள்ளதாகவும் ரோஹன பண்டார இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.