தமிழர் பகுதியொன்றில் வைத்தியர்களால் பெரும் அவதிப்பட்ட மக்கள்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீண்டநேரமாக சிகிச்சை வழங்கப்படாத சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இன்று (25) காலை 6.30 மணியளவில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வயோதிபர்கள் இருவருக்கும், அவ் வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கும் அப்பகுதியில் இருந்த குளவிகூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் கொட்டியுள்ளது.
நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பு
உடனடியாக உறவினர்களால் மூவரும் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பில் இருப்பதாக கூறி நீண்டநேரம் பார்வையிடவில்லையென நோயாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அத்தோடு இன்னும் பல நோயாளர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நீண்ட நேர காத்திருப்பின் பின்னர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் வைத்தியர்கள் அல்லது தாதியர்கள் பணிபகிஸ்கரிப்பாக இருப்பினும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளர்களையாவது உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும் என நோயாளர்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.