கொழும்பில் நள்ளிரவில் தீப்பற்றிய கார் ; இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளின் சதி வெளிச்சமா?
தலங்கம, அகுரேகொட, குட்டியாவத்த துணை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் திரு. புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
பொலிஸ் தகவலின்படி, குறித்த கார் காலி அகலியா பகுதியில் கைவிடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அப்போது, அந்த வாகனம் தீப்பிடித்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டைக் கொலையில் வெளிநாட்டில் மறைந்து இருப்பதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவைச் சேர்ந்த “கரந்தெனிய சுத்தா” என அழைக்கப்படும் ஜெயலத் சில்வா தொடர்புடையவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முன்னதாக, உயிரிழந்த வழக்கறிஞர் கரந்தெனிய சுத்தாவுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், பின்னர் அவரது முக்கிய போட்டியாளராகக் கருதப்படும் “லோகு பாட்டி” என்பவரின் வழக்கிற்காகவும் ஆஜராகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் தகவல் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தக் கொலை சுத்தாவின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என விசாரணையில் கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பாக நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.