இலங்கையில் புற்றுநோயால் நாள் ஒன்றுக்கு 4 பேர் உயிரிழப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 பேர் வரை வாய்ப் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என வாய் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வைத்தியர், நாட்டில் ஆண்களிடையே பரவும் புற்றுநோய்களில் வாய்ப்புற்று முதலிடத்தில் உள்ளதாகவும், ஆண்டுக்கு 2000 முதல் 3000 பேருக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
அவருடைய விளக்கத்தின்படி, வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்னர் அதன் ஆரம்ப அறிகுறிகள் தென்படும். எனவே ஆரம்ப நிலையில் நோயை கண்டறிந்தால், 90% வரை கட்டுப்படுத்த முடியும்.
இதன் முக்கிய காரணிகளாக புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் பயன்பாடு, மதுபானம், பாக்கு மற்றும் வைரஸ் தொற்றுகள் உள்ளன.
இன்றைய சூழலில், பாடசாலை மாணவர்களிடையே புகைப்பழக்கம் அதிகரித்து வருவதால், அவர்களுக்குள் வாய்ப்புற்றுநோய்க்குரிய ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன என்று வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.