குடிபோதையில் பணிக்கு வந்த மருத்துவர்; ஆத்திரமடைந்த மக்களால் நிகழ்ந்த அதிரடி !
கம்பளை - புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் குடிபோதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்லார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த பதினான்கு ஆண்டுகளாக அங்கு பணியாற்றிய வைத்திய அதிகாரி அதிகப்படியான மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வைத்தியசாலையின் நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.
வைத்தியசாலை முன்பாக பெரும்போராட்டம்
இந்த வைத்திய அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி 2019ஆம் ஆண்டு முதலே அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி அதிகாரிகளுக்கு கடிதங்களையும் அனுப்பியிருந்தனர்.
மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவிய நிலையிலும், சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சு ஆகியவை பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அந்த வைத்திய அதிகாரியின் மதுப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த 5ஆம் திகதி கம்பளை – நுவரெலியா பிரதான வீதியை மறித்து வைத்தியசாலை முன்பாக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய உடனடியாக தலையிட்டு, அந்த வைத்திய அதிகாரியை இடமாற்றம் செய்து புதிய நிர்வாகத்தை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் அந்த வைத்திய அதிகாரி மதுப்பழக்கத்திலிருந்து மீளாதது கவலை அளிக்கிறது என்றும், இதற்கு அப்பகுதி மக்கள் பொறுப்பாக முடியாது என்பதால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்றும் ,
மருத்துவர்களுக்கு ஜாதி, மதம், குலம் போன்ற வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்றும், வைத்தியரிடம் வரும் அனைவரும் நோயாளிகள் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டதோடு, வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, கலந்துரையாடலில் பங்கேற்ற அப்பகுதி மக்கள், மலையக பிரதிநிதிகள், வியாபாரிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் 28ஆம் திகதி வைத்தியசாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவதாகவும்,
புதிய இடத்திற்குப் பொறுப்பான பதில் மருத்துவராக புதிதாக பொறுப்பேற்ற கம்பளை மேல் மாகாண சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் முகமது பாஹிம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வைத்தியசாலையை மேம்படுத்த பாடுபடுவதாகவும் தெரிவித்தனர்.