அம்பாறை மருத்துவர் மரணம் ; தேடப்படும் நபர் மீது பல மோசடி புகார்கள் ; பொலிஸ் விசாரணையில் தகவல்
கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறையைச் சேர்ந்த பெண் மருத்துவரின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வரும் நபர் மீது நாடு முழுவதும் பல்வேறு மோசடி புகார்கள் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த நபர் திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்டவர் எனவும், பல இளம் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து பணம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறை (CID) உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது, சந்தேக நபர் உயிரிழந்த பெண் மருத்துவரை கனடாவுக்கு அனுப்புவதாகவும், திருமணம் செய்வதாகவும் கூறி அவரிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷ்யாமா என்ற 33 வயதுடைய பிசியோதெரபிஸ்ட், குறித்த நபரை சுமார் 8 மாதங்களாக அறிந்திருந்ததாகவும், அவர் தன்னை மென்பொருள் பொறியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு திருமண வாக்குறுதி வழங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கனடாவுக்கு குடிபெயர்வதற்கான ஏற்பாடுகள் செய்வதாக கூறி, அவர் அவ்வப்போது பணம் பெற்றுள்ளதாகவும், இதற்காக குறித்த பெண் வங்கிகள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் கனடா செல்லும் திட்டம் நிறைவேறாத நிலையில், பெண் மருத்துவர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாகவும், கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
மேலும், சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் ஊடாக பயணத் தடையும் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் மரணத்திற்கான சரியான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் கீழ் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.