உங்கள் ஆயுளை பாதியாக குறைக்கும் உணவுகள் எது தெரியுமா?
தற்போதைய நவீன உலகில் நாளுக்கு நாள் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் தான். அதுவும் தற்போது ஜங்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விற்பனை அதிகரித்துள்ளன.
இந்த உணவுகள் ஒருவரது உடலில் பலவிதமான நோய்களின் அபாயத்தை அதிகரித்து, ஒருவரது ஆயுட்காலத்தையே குறைக்கின்றன என்பது தெரியுமா?

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ் பாக்கெட், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பாக்கெட் ஸ்நாக்ஸ், உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள், ஜங்க் உணவுகள் போன்றவை. இந்த வகை உணவுகளில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, உப்பு, பதப்படுத்த பயன்படுத்தும் கெமிக்கல்கள், கெட்ட கொழுப்பு போன்றவை உடலினுள் சென்று சர்க்கரை நோய், பிபி, கொலஸ்ட்ரால், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்து, ஆயுளை குறைக்கிறது

குளிர்பானங்கள்
தற்போது ஏராளமான புதுபுது குளிர்பானங்களான கார்பனேட்டட் பானங்கள் விற்கப்பட்டு வருகின்றன. அதுவும் இவற்றின் பக்கவிளைவுகளை தெரிந்தே குடித்து வருகிறோம். குளிர்பானங்களில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக உள்ளன. அதுவும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகின்றன. அதுவும் டப்பாக்கள் மற்றும் டின்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகளிலும் இந்த சர்க்கரை அதிகமாகவே உள்ளன. இந்த பானங்களை தொடர்ந்து குடித்து வரும் போது, இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகும், கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வரும், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வந்து, கடைசியில் மோசமான வியாதிகளால் அவதிப்பட நேரிடும்

எண்ணெயில் பொரித்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் சரி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டாலும் சரி, இரண்டும் ஒரே மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்தும். எப்பவும் எண்ணெய்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடுப்படுத்தும் போது, அதில் உள்ள கொழுப்பு நஞ்சாகி, கெட்ட கொழுப்பாக மாறும். இது மிகவும் ஆபத்தானது. அதுவும் சிக்கன், முட்டை போன்ற சத்தான உணவுகளை எண்ணெயில் பொரிக்கும் போது, அதிலிருந்து எந்த சத்தும் கிடைக்காது. மாறாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகி, இரத்த குழாய் பாதிக்கப்படுவதோடு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களுக்கு ஆளாகக்கூடும்.

உப்பு நிறைந்த உணவுகள்
உப்பு என்னும் சோடியம் குளோரைடு உடலினுள் அதிகமாக செல்லும் போது, அது இரத்தக் குழாய்களை சேதப்படுத்தும். அதாவது நீர் அதிகம் உடலில் தேங்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதன் விளைவாகவே பல்வேறு உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். அதுவும் ஊறுகாயில் இருந்து டின்களில் அடைத்து விற்கப்படும் அனைத்து உணவுகளுமே உப்பு அதிகம் நிறைந்த உணவுகள் தான். ஏன் உப்பு நிறைந்த கருவாட்டை கூட அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சொல்லப்போனால் இந்த வகை உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களை சேதப்படுத்தும்
