பட்டம் விட வேண்டாம்; மின் விநியோகம் தடைப்படும் அபாயம் !
உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்றக் கம்பிகளின் கீழ், மின்கோபுரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய முறைமை இயக்குநர் (NSO) தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டங்கள் மற்றும் அவற்றின் நூல்கள் மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கிக்கொள்வதால் பல சந்தர்ப்பங்களில் மின்சார பரிமாற்றக் கம்பிகள் செயலிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கியுள்ள பட்டங்கள்
இவ்வாறான சம்பவங்கள் மின்சாரக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன், மின்சார பரிமாற்றக் கம்பிகள் தானியங்கி முறையில் துண்டிக்கப்படுவதற்கும் காரணமாக அமையக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கியுள்ள பட்டங்கள் மற்றும் நூல்கள் தற்போது பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகளின் கீழ் மனிதர்களால் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் தேசிய மின்சார முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், மின்சார உற்பத்தி அலகுகள் செயலிழப்பதற்கும் வழிவகுக்கலாம்.
இவ்வாறான சம்பவங்கள் காரணமாக நேற்று (2) தேசிய மின்சார முறைமையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதாகவும், முறைமையின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான அவசர நடவடிக்கையாக தெரிவுசெய்யப்பட்ட சில மின்சார விநியோக வழித்தடங்களைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, குறித்த மின்சார விநியோக வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டிருந்த சில நுகர்வோரின் மின்சார விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, குறித்த பிரதேசங்களில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்த்து, தேசிய மின்சார முறைமையின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தடையற்ற செயற்பாட்டை உறுதி செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.