காலை நேரத்தில் இந்த உணவுகளை மட்டும் தப்பி தவறியும் சாப்பிடாதீங்க
காலை நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால், அது நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்கும். காலை நேரம் அனைவருக்கும் மிக முக்கியமானது. ஒரு நல்ல நாளை தொடங்க நல்ல காலை உணவு மிகவும் முக்கியமானது.
காலை நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால், அது நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்கும். எனவே, உங்கள் நாளை எந்தெந்த உணவுகளுடன் தொடங்க வேண்டும், எதனை சாப்பிடக்கூடாது என தெரிந்துகொள்வது முக்கியம்.
காலை நேரத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பழ ஜூஸ்
காலை எழுந்ததும் பழ ஜூஸ் அருந்துவது நல்லது என நம்பி பலரும் அருந்தி வருகின்றனர். இருப்பினும், இது முற்றிலும் சரியானது அல்ல. உண்மையில் பழச்சாற்றில் நார்ச்சத்து இல்லை என்பதால் காலையில் பழச்சாறு அருந்துவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால், நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் வளர்சிதை மாற்ற கோளாறுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே பழச்சாறுக்கு பதிலாக எலுமிச்சை தண்ணீர், வெள்ளரிக்காய் சாறு, சாத்துக்குடி போன்றவற்றை அருந்தலாம்.
பேன்கேக் மற்றும் வேஃபில்ஸ்
பெரும்பாலான மக்கள் காலை நேரத்தில் எளிதாக செய்யும் உணவை தேர்வு செய்கின்றனர். இதன் விளைவாக இட்லி , தோசை என்பதெல்லாம் மாறி தற்போது பேன்கேக் மற்றும் வேஃபில்ஸ் செய்வதை விரும்புகின்றனர். விரைவாகவும், எளிதாகவும் செய்யக்கூடிய உணவு என்பதால் பேன்கேக் மற்றும் வேஃபில் தற்போது பெரும்பாலானோர் வீடுகளில் காலை உணவாக உள்ளது. ஆனால் காலை நேரத்தில் இவற்றை சாப்பிடுவதால் நாள் முழுவதும் ஆற்றல் இன்றி உணர்வீர்கள்.
தேநீர்
பலர் ஒரு கப் தேநீர் அருந்திவிட்டு தான் காலையில் மற்ற வேலைகளை தொடங்குகிறார்கள். காலையில் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், அதனை அருந்தவில்லை என்றால் அசௌகரியமாக உணர்கிறார்கள். இருப்பினும், காலையில் தேநீர் அருந்துவதால் உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக அமிலத்தன்மை, வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம், மேலும் இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.
காபி
காலையில் எழுந்ததும் காபி அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. காலையில் காபி குடிப்பது கார்டிசோலின் அளவை அதிகரித்து, ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். இதனால் நமது இரத்த அழுத்தம் அதிகரித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக காலை உணவுக்குப் பிறகு குடிக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.