ருத்ராட்சத்தை எங்கு அணிந்தால் அளவில்லாத புண்ணியம் கிடைக்கும் தெரியுமா ?
ருத்ராட்சம் என்பது சிவ பெருமானின் கண்ணில் இருந்து வெளிப்பட்ட கண்ணீர் துளிகளில் இருந்து தோன்றியதாக புராணங்கள் சொல்கின்றன. ருத்ராட்சம், சிவ சின்னங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ருத்ராட்சம் என்பது வெறும் மணிகள் கிடையாது.
அவை சிவனின் அம்சமாக கருதப்படுபவை. ருத்ராட்சத்தை அனைவராலும் அணிந்து விட முடியாது. எவர் ஒருவருக்கு சிவ பெருமானின் அருள் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே ருத்ராட்சத்தை தொடர்ந்து அணிய முடியும். சிவனின் அருள் இல்லை என்றால் அவர்களால் ருத்ராட்சம் அணியவே முடியாது.
நீங்கள் இதுவரை ருத்ராட்சம் அணிய வேண்டும் என நினைத்தது கூட இல்லை என்றாலும் சிவனின் அருள் உங்களுக்கு கிடைத்து, நீங்கள் ருத்ராட்சம் அணிய வேண்டும் என சிவன் நினைத்து விட்டால், ஏதாவது ஒரு வழியில் ருத்ராட்சம் உங்களை வந்தடையும். ருத்ராட்சம் அணிந்தவர்கள் சிவனுக்கு சமமானவர்களாக கருதுப்படுகிறார்கள்.
ருத்ராட்சம் அணிந்தவர்களை தேவர்களும் கூட சிவனின் அம்சமாக கருதி வணங்குவதாக சொல்லப்படுகிறது.
ருத்ராட்சம் அணிபவர் பிறவி பிணியில் இருந்து விடுபட்டு, மோட்சம் அடைவார்கள். ருத்ராட்சம் அணிந்தவர்களை நெருங்குவதற்கு யம தர்மராஜனே அச்சப்படுவார் என்பார்கள்.
ருத்ராட்சம் அணிவதால் மனம் அமைதி அடையும். எதிர்மறை சக்திகள் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதோடு சிவனின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும், அனைத்து விதமான பாவங்களில் இருந்தும் விடுபடுவதற்கும் ருத்ராட்சம் அணியலாம்.
ருத்ராட்சம் அணிந்து மந்திர ஜபம் செய்வது, விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, யாகம் போன்ற ஆன்மிக சடங்குகளில் கலந்து கொள்வது ஆகியவற்றை செய்யும் போது அதனால் கிடைக்கும் பலன்கள் இரண்டு மடங்காக பெருகும்.
நாம் ருத்ராட்சம் அணியாவிட்டாலும், ருத்ராட்சம் அணிந்த ஒருவருக்கு உணவு அளித்தால் கூட அது நமக்கு பலன் தரும். நம்முடைய பாவங்கள் நீங்கும். ருத்ராட்சம் அணிந்து குளித்தால் கூட, அதன் மீது பட்டு, நம்முடைய உடலில் படும் நீரால் கங்கை நதியில் புனித நீராடிய பலன் நமக்கு கிடைக்கும்.
மன அமைதி பெற வேண்டும், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், மன தைரியம் கிடைக்க வேண்டும் என்பவர்களும் கூட ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஆண், பெண் என பேதமின்றி யார் வேண்டுமானாலும் அணியலாம்.
அப்படிப்பட்ட ருத்ராட்சத்தை சிலர் கழுத்திலும், சிலர் கைகளிலும் அணிந்திருப்பதை பார்த்திருக்கிறோம். ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் எப்படி ஒவ்வொரு விதமான பலன் கிடைக்குமோ, அதே போல் ருத்ராட்சத்தை அணியும் இடத்தை பொருத்தும் அதன் பலன்கள் மாறுபடும்.
ருத்ராட்சத்தை அணிவதே புண்ணியம் தான் என்றாலும் உடலில் எந்த பகுதியில் அணிந்தால் அளவில்லாத புண்ணிய பலனை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தலை - ருத்ராட்சத்தை தலையில் அணிந்தால் கோடி புண்ணியம்
காது - ருத்ராட்ச மணியை காதுகளில் அணிந்தால் பத்து கோடி புண்ணியம்
கழுத்து - ருத்ராட்ச மாலை அல்லது மணிகளை கழுத்தில் அணிந்தால் நூறு கோடி புண்ணியம்.
கை - ருத்ராட்ச மாலையை கைகளில் அணிந்தால் லட்சம் கோடி புண்ணியம்.
இடுப்பு - ருத்ராட்ச மணிகளை இடுப்பில் அணிந்தால் நேரடி மோட்சம்.