ஆளி விதைக்குள் இவ்வளவு நன்மைகளா?
ஆளி விதைகளை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சர்ய பலன்கள் என்னென்ன தெரியுமா? இப்போதெல்லாம், ஆரோக்கியமாக இருக்க இயற்கையான மற்றும் சத்தான உணவுகளைத் நம்மில் பலரும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். அவற்றில் ஒன்றுதான் ஆளி விதைகள். அளவில் சிறியதாக இருந்தாலும், இவை ஊட்டச்சத்து பெட்டகமாகவே கருதப்படுகின்றன.

ஆளி விதைகள் ஆயுர்வேதத்தில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உடலுக்குப் பல வழிகளில் நன்மை பயக்கும். இருப்பினும், அவற்றை எப்போதும் சரியான அளவிலும், நிபுணர் ஆலோசனையின்படியும் உட்கொள்ள வேண்டும்.
ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து என்பது, ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்க உதவும். அப்படிப்பட்ட இதை தொடர்ந்து சமச்சீரான அளவில் உட்கொள்வதென்பது, வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்கவும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் அதிகளவில் உதவும். இந்த விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதும் மிக மிக எளிதுதான். அரைத்து பொடியாக்கியோ, வறுத்தோ எளிதாக சாப்பிடலாம்.

ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்து உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களாகக் கருதப்படுகின்றன.
சமச்சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களோடு சேர்த்து, உணவில் ஆளி விதையைச் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நிறைய நன்மை பயக்கும். இருப்பினும், இதய நோய் அல்லது பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே இதை உட்கொள்ள வேண்டும்.
உடல் எடையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கும் ஆளிவிதை நன்மை பயக்கும். இதிலுள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசி உணர்வைக் குறைக்க உதவும். இருப்பினும், ஆளிவிதையை மட்டும் சாப்பிடுவதால் உடல் எடை குறையாது. சமச்சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியும் அவசியமானவை
ஆளி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தைப் பேண உதவும். ஆளிவிதைகள், சருமத்திற்கும் கூந்தலுக்கும்கூட அதிக நன்மை பயக்கும். இவற்றை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் தண்ணீர், தயிர், சாலடுகள் அல்லது பிற உணவுகளுடன் சேர்த்து உணவில் கலந்து கொள்ளலாம்.
