7 இலட்சம் லிட்ரோ எரிவாயு விநியோகம்
வரும் 27 ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தையில் நிலவும் அதிக தேவை மற்றும் நுகர்வோரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, கடந்த 22 ஆம் திகதி வருகை தந்த கப்பலுக்கு மேலதிகமாக நேற்றைய தினமும் (24) 'GOODWILL' கப்பல் மூலம் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாளை (26) மேலும் ஒரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாகத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், அதற்கமைய 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட கப்பலிலிருந்து 350,000 எரிவாயு சிலிண்டர்கள் கடந்த 23, 24 மற்றும் இன்றைய தினமும் (25) தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் சில நாட்களில் நுகர்வோர் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சந்தையில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.