தண்டனை என்ற பெயரில் தாக்குதல்? ; மாணவர் வைத்தியசாலையில், அதிபர் மீது குற்றச்சாட்டு
அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் ஒருவர், கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இச்சம்பவம் குறித்து சூரியவெவ பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினராகப் பதவி வகிப்பதே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

16 வயதுடைய குறித்த மாணவன், கடந்த 8 நாட்களாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.
சூரியவெவ பொலிஸாரால் தமது பிள்ளைக்கு நீதி கிடைக்காத காரணத்தினால், மாத்தறை - ஹம்பாந்தோட்டை இரு திசைகளுக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக மாணவனின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
பிள்ளை ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமே தவிர, இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடமும் முறைப்பாடு செய்ய எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.