யாழில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ; முன்னுரிமை அடிப்படையில் தீர்வு ; அரசாங்கம் உறுதி
காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு, அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தருதல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் வெறும் புள்ளிவிபரங்களோ அல்லது எண்ணிக்கைகளோ அல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களது குடும்பங்கள் நீண்டகாலமாக மனவேதனையுடனும் எதிர்பார்ப்புடனும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 2 ஆயிரத்து 452 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளதுடன், பதிவு செய்யப்படாத பல சம்பவங்களும் இருக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, உண்மை கண்டறிதல், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்ததாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், உண்மை வெளிக்கொணரல், நீதி நிலைநாட்டல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்தார்.