பிரபல குற்றவாளி ஹரக் கட்டா தப்பிச் செல்லவிருந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!
சிஐடியினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்பவர் தப்பிச் செல்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்தில் உள்ள போக்குவரத்து பிரிவு முன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உரிமையாளர் இல்லாத குறித்த மோட்டார் சைக்கிள் மீது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிஐடிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பணிப்பாளரின் வாகனத் தரிப்பிடத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிளின் செஷி எண்கள் மாற்றப்பட்டு அதன் எரிபொருள் தாங்கி முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இதன்படி, ஹரக் கட்டா தப்பிச் செல்வதற்காக குறித்த மோட்டார் சைக்கிள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கக்கூடும் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த மோட்டார் சைக்கிளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்குள் கொண்டு வந்தது யார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிசிடிவி அமைப்பு செயலிழந்துள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.