தாய்லாந்திலிருந்து வந்த மேசைப் பலகைகளில் காத்திருந்த ஷாக் ; இளைஞன் அதிரடி கைது
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பரிசுப் பொருட்கள் என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட மேசை செய்ய தேவையான பாகங்கள் அடங்கிய சந்தேகத்திற்கிடமான சில பொதிகளை பேலியகொட பகுதியில் அமைந்துள்ள சுங்கப் களஞ்சியசாலையில் வைத்துப் பரிசோதித்தபோதே இந்த கஞ்சா மற்றும் ஹஷீஷ் தொகை கண்பிடிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள்
இதன்போது, அந்த மேசைப் பலகைகளின் உட்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2,428 கிராம் கஞ்சா மற்றும் 12,372 கிராம் ஹஷீஷ் போதைப்பொருட்களைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் ராகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையின் பெறுமதி 24 மில்லியன் ரூபாவாகும்.அத்தோடு ஹஷீஷ் தொகையின் பெறுமதி 133 மில்லியன் ரூபாய் என சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் தொகை என்பன பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.