பாழடைந்த வீட்டில் சடலமாக கிடந்த 7 வயது சிறுவன் ; 10 வயது மகனுடன் தாய் கைது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுவன், பாழடைந்த வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்னவென்பது தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேதனியாமங்கலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், காலை 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு சிறுவன் சென்றுள்ளார்.

தேடும் பணி
ஆனால், மாலை வரை வீடு திரும்பாததால், உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், திங்கட்கிழமை அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் கிடந்த முத்துச்செல்வத்தின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சிறுவன் உயிரிழந்ததற்கான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.
காவல்துறையின் விரிவான விசாரணையில், காலை 11 மணியளவில் கோவில் அருகே உயிரிழந்த சிறுவன் முத்துசெல்வமும், அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அப்போது விளையாட்டாக, மற்றொரு சிறுவன் உயிரிழந்த சிறுவனின் கழுத்தில் கயிற்றை இறுக்கியதாகக் கூறப்படுகிறது.
அதில் இருந்து தப்பிக்க ஓடியபோது உயிரிழந்த சிறுவனுக்குத் தலைசுற்றல் ஏற்பட்டதாகவும், கோவில் சுவரில் வாய் மோதியதில் முன்பக்கப் பற்கள் சேதமடைந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், அந்தச் சிறுவன் மற்றொரு சிறுவனின் வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, அந்த மற்றொரு சிறுவனின் தாய் முன்னிலையில், சிறுவன் முத்துச்செல்வன் கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் உயிரிழந்ததை அறிந்த தாய், தனது மகனின் செயலால் ஏற்பட்ட சம்பவத்தை மறைப்பதற்காகவும், அதுதொடர்பான ஆதாரங்களை அழிக்கும் நோக்கிலும், சிறுவனின் உடலை தனியாமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கத்திற்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் மறைத்து வைத்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.