பேரிடர் நிவாரணம் வழங்குவதாக மோசடி; மக்களே நம்பவேண்டாம்
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக்கூறி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரும் பல குறுஞ்செய்திகள் சமூக ஊடக தளங்கள் மூலம் பரவி வருவது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின் ஆதரவுடன், முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்
அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பொறிமுறையின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது என்பதைப் பொதுமக்களுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் , பொதுமக்கள் இவ்வாறான மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும், அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறும் அன்புடன் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாடு முழுவதுக்கும் சவாலான இந்தக் காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீண்டும் பாதிக்கப்படுவதைத் தடுக்க, இத்தகைய செயல்களிலும் மோசடிகளிலும் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு வலியுறுத்துகிறது.