மின்வெட்டால் வீடொன்றில் ஏற்பட்ட விபரீதம்!
பனாபிட்டிய, மானந்துவ வீதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதுடன் இரு பெண்கள் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட சமயத்தில், வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டுள்ளது.
வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் வயதான பெண் சக்ர நாற்காலியின் உதவிடன் வந்து மெழுகுவர்த்தியை அணைக்க முற்பட்ட போது மெழுகுவர்த்தி அருகில் இருந்த படுக்கையில் விழுந்து தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தீயானது வீட்டிலுள்ள இரண்டு அறைகளுக்கும் பரவியதுடன், வீட்டு உரிமையாளரின் தாய் மற்றும் மருமகள் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினால் வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமானதுடன் சொத்துக்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது களுத்துறை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

