காத்தான்குடியில் மர்மமான குழி ; விசேட அதிரடிப்படையினர் சோதனை
மட்டக்களப்பு - காத்தான்குடி தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரியான ஸாரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் இன்று வியாழக்கிழமை (06) சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரிகள் மோட்டார் சைக்கிள்
தாழங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்தனர்.
இந்த பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4ம் திகதி காணி அதன் உரிமையாளர் சென்ற போது அங்கு நிலம் பாரியளவில் குழி தோண்டப்பட்டு இருப்பதை கண்டு ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சத்தை அடுத்து நேற்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் சில தீய சக்திகள் அந்த பகுதியில் ஏதாவது வெடிபொருட்கள் அல்லது வேறு ஏதாவது பொருட்களை புதைத்து வைத்துவிட்டு அதை தோண்டி மீட்டு எடுப்பதற்காக குழி தோண்டி இருக்கலாம் என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் விசேட அதிரடிப்படையினர் இன்று சென்று அந்த பகுதியில் நிலத்தை கம்பிகளால் குத்தியும் மற்றும் எக்ஸ்றே இயந்திரம் மூலமாகவும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.