கஜ்ஜா, இரண்டு பிள்ளைகள் கொலை வழக்கில் சம்பத் மனம்பேரிக்கு நேரடித் தொடர்பு
பெக்கோ சமன் மற்றும் சம்பத் மனம்பேரி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
மித்தெனியாவில் கஜ்ஜாவும் அவரது இரண்டு பிள்ளைகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிரதான சந்தேகநபரான பெக்கோ சமனின் நெருங்கிய நண்பரான சம்பத் மனம்பேரிக்கு நேரடித் தொடர்பு உள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீவிர விசாரணை
கஜ்ஜாவை கொலை செய்ததாகக் கூறப்படும் துப்பாக்கிதாரியான ரொஷான் மற்றும் சம்பத் மனம்பேரி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் எனவும் சம்பத் மனம் பேரியின் தனிப்பட்ட வேலைகளிலும் ரொஷான் உதவியுள்ளார் என்பதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கஜ்ஜாவைக் கொலை செய்ய உதவியவர் ஒரு காலத்தில் சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான பேருந்தில் பணியாற்றியரென்றும் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பெக்கோ சமனுக்குச் சொந்தமான துப்பாக்கியை, கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சம்பத் மனம்பேரி ஒருவரிடம் கொடுத்தமையும் தெரியவந்துள்ளது.
மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை மறைப்பதிலும் சம்பத் மனம்பேரி முக்கிய பங்காற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த இரசாயனப் பொருட்களை ஏற்றி வந்த கொள்கலன்களை மறைப்பதற்காக, சம்பத் மனம்பேரியின் சகோதரியினது வீட்டைச் சுற்றி ஒரு உயரமான மதில் கட்டப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.