சர்ச்சையில் சிக்கிய எம்பி மகன் மற்றும் மருமகள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை!
போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைதான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாரச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
வீரக்கெட்டிய காவல்துறையினரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட குறித்த இருவரும் வலஸ்முல்ல நீதவான் மஹேசிகா விஜேதுங்க முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். குறித்த இருவரும் பாதுகாப்பற்ற முறையில் கெப்ரக வாகனத்தின் பின்பகுதியில் குளிர்சாதனபெட்டியை ஏற்றி தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முயற்சித்தனர்.
இதனை அவதானித்த போக்குவரத்து காவல்துறையினர் அவர்களை தடுத்துள்ள நிலையில், காவல்துறையின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்தநிலையில் அவர்கள் தங்களது சட்டத்தரணிகள் ஊடாக நேற்று முன்தினம் காவல்நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதனையடுத்து, இன்று வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
