வட மாகாண ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒத்துழைப்புடனோ நிறைவேற்றமாறு என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகத்திடம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (07) வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்றத் தலைவர்களுக்கம் ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிலத்தடி நீர் பாதுகாப்பு
இச் சந்திப்பிலேயே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.
அவர் மேலும் யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான பெரும் அர்ப்பணிப்பினை வலிகாமம் கிழக்குப் பிரதேசமே மேற்கொள்கின்றது. தொண்டமானாறு மற்றும் செம்மணி நீரேரிகள் எமது ஆட்சிப் பகுதிக்கு உட்பட்டவை.
நிலத்தடி நீரைப்பாதுகாப்பதற்கான உவர் நீர்த்தடுப்புத் திட்டம் இங்கு செயற்படுத்தப்படுவதனால் எமது மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளப்பாதிப்பினை எதிர்கொள்கின்றார்கள்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டத்துடன் இணைந்த உப திட்டங்கள் வகுக்கப்பட்டு அதன்வாயிலாக மக்களை வெள்ளப்பாதிப்பில் இருந்து நாம் பாதுகாக்கவேண்டும். அவ்வாறான திட்டங்கள் நிலைத்தகு சிந்தனையுடன் நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் எதிர்கொண்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு தீர்வு காணலாம்.
ஒவ்வொரு வருடமும் அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி தெற்கு, ஆவரங்காலின் ஒருபகுதி, வாதரவத்தை, புத்தூர் கிழக்கு என வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் பல பகுதி வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகின்றது. இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடர் நிலையை எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறான நிலையில் மாகாண சபை கூட தனது குறித்தொதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் கீழ் மேற்படி மக்களுக்கு சிறந்த திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி மக்களின் பாதிப்புக்களைக் குறைக்கலாம்.
உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச கொடையாளர்களிடம் மேற்படி உவர் நீர்த் தடுப்பணை நன்னீர்த்திட்டத்தினை பேணுவதனால் பாதிக்கப்படும் மக்களுக்கான பாதிப்பை நிவர்த்தி செய்யத்தக்க திட்டத்தினை மேற்கொள்ள நிதி கோரிக்கையினை ஆளுநர் அவர்கள் முன்வைக்க வேண்டும் என தவிசாளர் விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து கருத்தரைத்த ஆளுநர் நா.வேதநாயகம் அவர்கள் சர்வதேசத்திட்டங்களில் வாயிலாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். .