தமிழ் பிரேதசத்தில் இளம் ஜோடி செய்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார்
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 2030 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் தம்பதி வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய தொகையிலான ஐஸ் போதைப்பொருள் இதன்போது முதல் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஐஸ் போதைப்பொருள்
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் தலைமையிலான பொலிஸ் குழு மாலை கல்குடாவில் இருந்து ஐஸ் போதைப்பொருளை முச்சக்கரவண்டியில் எடுத்துச்சென்ற கணவன், மனைவி ஆகிய இருவரை பொலிஸார் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.
இதனையடுத்து, அவர்களிடமிருந்து 2030 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன கைப்பற்றப்பட்டதையடுத்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மொறக்கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு பிரதான போதைப்பொருள் வியாபாரி குறித்த தம்பதிகளிடம் கொழும்பில் நாய்க்குட்டி ஒன்று வாங்கியிருப்பதாகவும் அதனை கொண்டுவந்து தருமாறும் அதற்கு கூலியாக 30 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாகவும் தெரிவித்து முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த தம்பதி கொழும்புக்கு புகையிரதத்தில் சென்றுள்ளனர். அங்கு புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த தம்பதிகளிடம் பெண் ஒருவர் நாய்க்குட்டி ஒன்றையும் ஒரு பையையும் கொடுத்ததையடுத்து, அவர்கள் அதை எடுத்துக்கொண்டு பேருந்தில் கல்குடாவில் உள்ள தங்களது வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.
மொறக்கொட்டாஞ்சேனையில் உள்ள போதைப்பொருள் வியாபாரியிடம் தாங்கள் கொழும்பில் இருந்து கொண்டுசென்ற நாய்க்குட்டி மற்றும் பையை கொண்டுசென்று கொடுப்பதற்காக முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, தாங்கள் குறித்த பையை திறந்து பார்க்கவில்லை எனவும் அதில் போதைப்பொருள் இருப்பது தங்களுக்குத் தெரியாது எனவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட இளம் தம்பதிகளை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.