டிஜிட்டல் சேவைகளுக்கு வரி ; புதிய VAT திருத்தங்களுக்கு COPF அனுமதி
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான கௌஷல்யா ஆரியரத்ன மற்றும் நிஷாந்த ஜயவீர உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவழி ஊடாகவும் பங்கேற்றனர்.

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க வற் வரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து டிஜிட்டல் தளங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்கு வரி விதிக்கும் விடயம் அதிக கவனம் பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு இடையே இன்னும் சில சமத்துவமின்மைகள் காணப்படுவதாக குழுத் தலைவர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியதுடன், இதனால் இலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் தொழில்முனைவோருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் கவலை வெளியிட்டார்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சின் அதிகாரிகள், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள முறையை அடிப்படையாகக் கொண்டே இந்த வரி அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனிடையே, வற் வரிக்கான வருடாந்த வருமான எல்லை காலாண்டுக்கு 15 மில்லியன் ரூபாவிலிருந்து 9 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதால், புதிதாக சுமார் 10,000 வணிகங்கள் வற் வரி பதிவுக்குள் வரலாம் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் POS இயந்திரங்களைப் பெற கூடுதல் செலவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதோடு, சட்ட மீறல்களுக்கான அபராதம் ஒரு மில்லியன் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளமை குறித்தும் குழு உறுப்பினர்கள் கவலை வெளியிட்டனர்.

இதையடுத்து, புதிய முறைமைக்கு சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தழுவிக்கொள்ளும் வரை அபராதங்களை விதிப்பதில் நெகிழ்வுத்தன்மையை பின்பற்றுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், வற் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், அதற்கான ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கு முன்பும் மீண்டும் COPF அனுமதி பெற வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவுப் பொருட்கள் இறக்குமதி தொடர்பான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களுக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சோள இறக்குமதி வரி 25 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகளில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கவனம் செலுத்துமாறு அதிகாரிகளிடம் குழு கேட்டுக்கொண்டுள்ளது.