டிஜிட்டல் எரிபொருள் அட்டை ; இலங்கையில் அறிமுகமாகும் புதிய திட்டம்
அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயல்முறையை அதிக வினைத்திறன்மிக்கதாகவும், அதன் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், அனைத்து அரசு வாகனங்களுக்கும் விசேட டிஜிட்டல் எரிபொருள் அட்டை ஒன்று வழங்கப்படும்.

எரிபொருள்
இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அரசு வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தின் போது இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளைக் குறைப்பது, தற்போதுள்ள ஆவணப் பணிகளைக் கட்டுப்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்துவது மற்றும் ஒவ்வொரு அரச நிறுவனத்தினதும் எரிபொருள் பயன்பாட்டைத் துல்லியமாகக் கண்காணித்து அறிக்கை இடுவதற்கான ஒரு முறையைத் தயாரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் புதிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஊடாக அரசு வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்யவும், எரிபொருள் விரயத்தைக் குறைத்து தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு வழங்கவும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் எதிர்பார்ப்பதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.