வைத்தியசாலைகளில் உணவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிரமம்
மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதார உதவி பணியாளர்களுக்கு ஒரு வேளை உணவை வழங்குவது பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள்
உணவுப் பொருட்களை விநியோகிப்போருக்கு சரியான முறையில் பணத்தை வழங்கவில்லை என்பதால் வைத்தியசாலைகளுக்கு உணவு, பழங்கள், சூப், கஞ்சி போன்றவற்றை சமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் என்பன விநியோகிக்கப்படுவது குறைந்து வருவதாக சங்கத்தின் தலைவர் எஸ்.பி.மெதவத்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகப் பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் இந்த சிக்கல் காணப்படுகிறது. நோய்களில் இருந்து குணமாக நோயாளிகளுக்கு மருந்து போன்று போஷாக்கான உணவையும் வழங்க வேண்டும்.
இந்த நிலைமை தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தி விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை பணத்தை செலுத்தி துரிதமாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மெதவத்த மேலும் தெரிவித்துள்ளார்.