ஊசி போட பீரங்கிப்படையை பாவிக்கவில்லை; பாதுகாப்பு செயலாளர் காட்டம்!
நாட்டில் உள்ள இராணுவ மருத்துவப் பிரிவினர் மருத்துவக் கல்வியைப் பெற்றுள்ளனர் என்றும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பீரங்கிப்படையை பாவிக்கவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன கூறுகிறார்.
அத்துடன் மருத்துவ கல்வி கற்காத குழு தடுப்பூசி போடுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது ஆதாரமற்றது என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்லந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு பீரங்கிப் படை ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்றும், தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் சுகாதாரத் துறை ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தடுப்பூசி திட்டத்தில் இலங்கை இராணுவ மருத்துவப் படையினர் இணைக்கப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
மேலும் இராணுவ மருத்துவப் பிரிவினர் களமிறக்கப்பட்ட பின்னர் 2,000-3,000 என செலுத்தப்பட்ட நாளாந்த தடுப்பூசிகள் 500,000 ஆக அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.