யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பாரிய அபிவிருத்திப் பணி
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டுள்ளார்.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.

சிறந்த விமானப் போக்குவரத்து சேவை
இதன்போது, பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.
திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும், அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.
அதற்கமைய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின் சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.